திரைவிமர்சனம்
Typography

பழிக்குப் பழிவாங்கும் கதைக்குள், தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்புக் கலையான ‘அடிமுறை’யைக் கதைக் களப் பின்னயாக்கி வந்திருக்கும் வணிக சினிமா பட்டாஸ். அசுரனின் அபாரமான வெற்றியின் பின்னர் வந்திருக்கும் தனுஷ் படம்.

வடசென்னையின் பின்தங்கிய பகுதியில் நவீன் சந்திரா குத்துச் சண்டைப் பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறார். அங்கே நிர்வாகப் பணியில் இருக்கிறார் நாயகி மெஹ்ரின். அவரை ஒருதலையாக விரும்புகிறார் சிறு திருட்டுகளில் ஈடுபட்டுவரும் சின்ன தனுஷ். தன்னைக் கண்டுகொள்ளாத மெஹ்ரினை வழிக்குக் கொண்டுவர அந்தப் பயிற்சிப்பள்ளியில் இருக்கும் கோப்பைகள், பதக்கங்கள் ஆகியவற்றை நண்பனுடன் சேர்ந்து ஆட்டையைப் போடுகிறார்.

இதனால் மெஹ்ரினின் சீட்டைக் கிழித்து அனுப்புகிறார் முதலாளி நவீன். ஆனால், திருட்டுப்போன பொருட்கள் திரும்ப வந்தால் மட்டுமே, வேலை கொடுப்பதற்கு அடமானமாக வைத்துக்கொண்ட அவரது கல்விச் சான்றிதழ்களைத் தருவேன் என்று மெஹ்ரினை கண் கலங்க வைக்கிறார். காதலி கலங்கினால் காதலன் சும்மா இருப்பானா, கைவந்த கலை இருக்கையில் கலக்கம் எதற்கு என்று காதலிக்கு ஆறுதல் கூறிவிட்டு சான்றிதழ்களை திருடிவர பாக்ஸிங் பள்ளிக்குள் நுழைகிறார்.

அப்போது அங்கே ஒரு கொலை முயற்சி நடப்பதைப் பார்த்து அதிர்ந்துபோகிறார் சின்னவர். நடுத்தர வயது பெண்மணியான சினேகா, அந்தப் பள்ளியின் முதலாளி, நவீன் சந்திராவை, ‘அடிமுறை’யைப் பயன்படுத்தி கொல்லப் போராடுகிறார். அந்தக் கொலை முயற்சியிலிருந்து நவீன் தப்பித்துவிட, அங்கே வந்த தனுஷைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார் சினேகா! பின்னே…? அச்சு அசலான தனது கணவனைப் போல அல்லவா இருக்கிறான் இந்தச் சின்னப் பையன்!? என்று ஆச்சரியமடையும் அவர், அவன் தனது மகன் என்று உறுதிசெய்துகொள்கிறார்.

இதன்பிறகு உங்களுக்குக் கதையைக் கூற வேண்டிய அவசியமில்லை. நீங்களே இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.. கராத்தே, குங்ஃபூ, ஜூடோ உள்ளிட்ட தற்காப்புக் கலைகளின் தயான ‘அடிமுறை’க்கு மாநில அளவில் அங்கீகாரம் வாங்கிக்கொடுக்கப் போராடிய தனது அப்பாவின் கதையை (பெரிய தனுஷ்), அம்மா சினேகா பிளாஷ் பேக்கில் எடுத்துக் கூற, ‘அடச் சே! இப்படியொரு சிங்கத்துக்குப் பிறந்த நாமா.. இவ்வளவு பெரிய காமெடிப் பீஸாக.. சுற்றிக்கொண்டிருக்கிறோம்!’ என்று வெட்கப்பட்டுப், பழிவாங்கக் கிளம்புகிறார்… அப்பாவின் சாவுக்கு சின்ன தனுஷ் எப்படிப் பழிக்குப் பழிவாங்கினார் என்பதை ‘பழைய பஞ்சாங்க’ திரைக்கதையில் நீட்டி முழக்கிச் சொல்கிறது ‘பட்டாஸ்’.

சின்ன தனுஷ் பாட்டாஸ் என்கிற பட்டப் பெயரில் வருவதால் இப்படியொரு தலைப்பு. மற்றபடி பாட்டாசு வெடிப்பதுபோன்ற எந்தப் பரபரப்போ விறுவிறுப்போ படத்தில் இல்லை. பட்டாஸ் என்கிற சக்தியாக வரும் சின்ன தனுஷின் காமெடி அலப்பறைகளும் அவருடன் இணைந்து காமெடி செய்திருக்கும் ‘கலக்கப்போவது யாரு’ புகழ் சதிஷின் ஊசிப் பட்டாசு காமெடிகளும் முதல் பாதிப் படத்தில் நம்மை உட்கார வைக்கின்றன. இரண்டாம் பாதியின் காட்சிகளை ஒவ்வொன்றாக மிக எளிதாக நீங்கள் ஊகித்துக்கொண்டே வரலாம். அப்படிப்பட்ட சங்க காலத்துத் திரைக்கதை இது.

அடிமுறைக் கலையில் அதிரடிக்கும் திரவியப் பெருமாள் வேடத்தில் அப்பா தனுஷாக காட்டியிருக்கும் ஈடுபாடு, மகன் சக்தி வேடத்துக்காகக் காட்டியிருக்கும் தரை லோக்கல் தனம் என தாம் வேற லெவல் நடிகர் என்று சொல்ல வைத்திருக்கிறார் தனுஷ். அவருக்கு இணையாக கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய வேடத்தில் சினேகா அட்டகாசம் செய்திருக்கிறார். தனுஷுடன் புதுப்பேட்டைப் படத்தில் நடித்தது ஒன்றுமில்லை என்றும் சொல்லும் அளவுக்கு, மனைவி, அம்மா என இரு பரிமாணங்கள் கொண்ட கன்னியாகுமரிப் பெண் வேடத்தில் அப்படியொரு பொருத்தப்பாட்டுடன் வலம் வருகிறார்.

அடிமுறைக் கலையின் குருவாக நாசர், வில்லனாக நவீன் சந்திரா இருவரும் தத்தமது வேடங்களில் கவனிக்க வைத்திருக்கிறார்கள். மகன் தனுஷுக்கு ஜோடியாக வரும் மெஹ்ரின் சுத்த வேஸ்ட். அவருக்கு நடிப்பு சுத்தமாக வரவில்லை.

படத்தில் எந்தப் பாடலும் தாக்கம் செலுத்தவில்லை. இசையமைப்பாளர் விவேக் – மெர்வினுக்கு அவுட் அண்ட் அவுட் ஒரு வணிக சினிமாவில் நல்ல களம் அமைத்தும் கோட்டைவிட்டுவிட்டார். ஆனால், ‘கேஸ்ட்லெஸ் கலெக்டீவ்’ இசைக்குழுவைச் சேர்ந்த அறிவு எழுதி, பாடியுள்ள ‘மவனே நீ’ பாடல் துடிப்பாக ஒலிக்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு நம்மை இருக்கையில் இருத்தி வைக்கும் வேலையைச் செய்திருக்கிறது.

பொங்கல் திருநாளில் வெளியாகி, தமிழர்களின் பாரம்பரிய அடிமுறைத் தற்காப்புக் கலையைப் பற்றி அதை மறந்துபோன தமிழர்களுக்கு நினைவூட்டியதன் அடிப்படையில் கவனம் ஈர்க்கும் படம் என்பதைத் தவிர்த்து வேறு பெரிதாக பொங்கவும் இல்லை வெடிக்கவும் இல்லை இந்தப் பட்டாசு.

- 4தமிழ்மீடியா விமர்சனக் குழு

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்