69 வது லோகார்ணோ சர்வதேசத் திரைப்பட விழாவில், ஆகஸ்ட் 4ந் திகதி பியாற்சா கிரான்டே பெருந் திரையில் காட்சிப்படுத்தப்பட்ட படம் (மோகா) Moka. இயக்குனர் Frédéric Mermoud, ஜெனிவா பல்கலைக்கழகத்தில் தத்துவார்தவியல் முதுகலைமானிப் பட்டமும், லுசான் (ECAL) கலைக் கல்லூரியில் சினிமாத்துறையில் பட்டம் பெற்றவர். அதனால் அவரது கதை மாந்தர்களின் உளவியல் நோக்கில் கதை நகரும் பண்பில் வந்திருக்கிறது மோகா.
கார் ஒன்று மோதியதால் கொல்லப்பட்ட சிறுவனின் சாவை, விபத்து என்கிறது காவல்துறை. ஆனால் அதை அவ்வளவு எளிதாக ஏற்றுறுக் கொள்ள முடியாத அவனின் தாய் அடையும் மன உளைச்சல், கொலையாளியை தனிப்பட்ட முறையில் தேடிச் செல்லல், தவறான கணிப்புக்கள், சரியான அடையாளங் காணல், தண்டிக்க எண்ணும் பழிவாங்கல் உணர்வு, என உணர்வுகளின் கோர்வையாக உருவாகியுள்ள திரைச்சித்திரம்.
இயக்குனரின் உணர்வுபூர்மான திரைக் கதையினை, நிகழ்காட்சிகளாக நம்முள் கடத்துபவர்கள் இருவர். கதையின் நாயகியாக வரும் Emmanuelle Devos மகனைப் பிரிந்த தவிப்பினையும், அவன் மரணத்திற்கான தேடலையும், அமைதியான கண்களின் வழி கொண்டலைகின்ற தாயாக வலம் வருகின்றார் படம் முழுவதும். அதனை அழகான ஒளிப்பதிவில் பார்வையாளனுக்கு மெல்லக் கடத்திவிடுகின்றார் ஒளிப்பதிவாளர் Irina Lubtchansky.
சுவிற்சர்லாந்தின் பிரெஞ் மொழிப்பகுதியிலும், பிரான்சிலும் படம்பிடிக்கப்பட்ட இப்படத்தில் அழகான காட்சிகளும், ஆர்ப்பாட்டமில்லாத கதை நகர்வும், பியாற்சா கிரான்டே ரசிகர்களுக்கு விருந்து. அதனால் அன்றைய மோசமான காலநிலையையும் கடந்து அதனை ரசித்தார்கள்.
Director
Frédéric Mermoud
Cast
Emmanuelle Devos , Nathalie Baye , Diane Rouxel , Samuel Labarthe , David Clavel
Producer
Damien Couvreur, Julien Rouch, Tonie Marshall, Jean-Stéphane Bron
Cinematography
Irina Lubtchansky
Set Design
Ivan Niclass
Sound
Michel Casang, Etienne Curchod
Editing
Sarah Anderson
- 4தமிழ்மீடியாவிற்காக : லோகார்ணோவிலிருந்து மலைநாடான்