திரைப்படவிழாக்கள்
Typography

லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின், சிறந்த தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் 20 திரைப்படங்களில், «Beach Rats» திரைப்படத்தை பார்க்க கிடைத்தது. சண்டேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக இயக்குனராக அடையாளம் காணப்பட்ட  Eliza Hittman இன் இரண்டாவது முழு நீளத் திரைப்படம் இது.

அமெரிக்காவின் புரூக்லின் நகர்ப்புற பகுதிகளில் வாழும் பதின்ம வயது வாலிபன் ஃபிராங்கி. தந்தை புற்றுநோயில் இறந்து கொண்டிருக்கிறார். தனக்கென ஒரு பெண் தோழியை தேடிக்கொள்ளுமாறு வற்புறுத்தும் தாய், நல்லொழுக்கம் இல்லாத நண்பர்கள், தன்னை பெரிய பெண்ணாக காட்டிக்கொள்ளும் தங்கை. இவை மத்தியிலிருந்து தனக்கென்ன பிடித்திருக்கிறது என்றே தெரியாமல் தவிக்கிறான் பிராங்கி.

வயது முதிர்ந்த ஆடவர்கள் தங்களது பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்தும் பாலியல் இச்சைத் தளங்களில் தன்னை இணைத்துக் கொண்டு, Chatting, Webcamming என்பவற்றில் அவர்களுடனான தொடர்பில் ஊறிப்போகிறான்.  அவர்களை நேரடியாக நதிக்கரையோரம் அழைத்து பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வது வரை நீடிக்கிறது அவனது பழக்கம். ஆனால் தான் ஓரினச் சேர்க்கையாளனகாவோ, அல்லது வயது முதிந்தவர்கள் மீது மாத்திரம் இச்சை கொண்டவனகாவோ அவனால் உணர முடியவில்லை / தன்னை அடையாளப்படுத்தவும் முடியவில்லை.  மறுபுறம், ஒரு இளம் பெண்ணுடன் நெருங்கிப் பழகுகிறான், உறவு வைத்துக் கொள்கிறான்.

தனக்கென்ன பிடித்திருக்கிறது என்பதே தெரியாமல், தன்னிடம் என்ன இருக்கிறது என்பது தெரியாமலும் இருக்கும் பிராங்கி கதாபாத்திரம் மூலம்  இளம் சமுதாயத்தின் மாறுபட்ட பாலியல் இச்சைகள் எங்கிருந்து தொடங்குகின்றன, அவை முறையாக அங்கீகரிக்கப்படுகின்றனவா, அல்லது அவற்றை வெளிப்படுத்தும் சூழல் தான் உள்ளதா என பல கேள்விகளுடனும், குழப்பங்களுடனும், சீர்த்திருத்தப்படவே முடியாத விளைவுகளுடனும் படம் முடிவடைகிறது.

இணையப் பாவணை உச்சத்தில் உள்ள எந்தவொரு நாட்டு நகர்ப்புறத்திற்கும் இக்கதை பொருந்தும். இளைஞர்களின் புதிய கலாச்சாரமிது என பார்ப்பதிலும் பார்க்க ஒரு இளைஞனிடம் «ஓரினப்பால்» பாலியல் இச்சை தொடங்கு நிலையில் உள்ள போது, அவர்கள் கைக்கொள்ளும் புதிய கலாச்சாரமிது என சொல்லலாம். அதனை மிக யதார்த்ததிற்கு மிக அருகிலிருந்து காண்பித்து அச்சுறுத்துகிறது இத்திரைப்படம். ஏனெனில் ஓரினச் சேர்க்கையாளர்களின் பாலியல் இச்சை இணையத்தளங்களின் புதிய வடிவங்களை அப்படியே படம்பிடித்து காட்டியிருக்கிறார் ஹிட்மென்.

அதற்காக, தமது பாலியல் தேவைகளே தாமே அடையாளம் கண்டுகொள்ளும் இளைஞர்களிடம் காணப்படும் குழப்பங்கள், சந்தேகங்கள், ஏமாற்றங்கள் என்பவற்றை தொட்டுணரக் கூடிய அளவுக்கு நெருங்கித் தேடியிருக்கிறார் இயக்குனர் ஹிட்மென். 

படம் முழுவதும் அருவறுக்கத்தக்க, அந்தரங்கமான பாலியல் காட்சிகள் பல உண்டு. ஆனால் அவை எவற்றையும், கலை எனும் பெயரில் வேண்டுமென்றே புகுத்திய அபத்தமான புனைவுகளாக அர்த்தப்படுத்திவிட முடியாது. மாறாக அக்காட்சிகளின்றி, அதன் ஆபத்தையும், அவலத்தையும் வேறுவழியில் சொல்லுவதும் கடினமானது.19 வயது பிராங்கியாக நடித்த ஹரிஸ் டிக்கின்சன் எனும் பிரித்தானிய நடிகர், ஃபிராங்கியாகவே வாழ்ந்திருக்கிறார். அனைத்து உணர்ச்சிகளும், பரிதவிப்பையும் அப்படியே மிகக் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இளம் பெண்கள், அல்லது வயோதிபர்களையே நலிந்த மனிதர்களாக எப்போதும் கதை பேசும் சினிமா மத்தியில், வேலையெதுவும் இல்லாத, எவராலும் கண்டுகொள்ளப்படாத, பள்ளியை இடைநிறுத்திய, எந்தவொரு எதிர்கால வாழ்க்கை பற்றிய சிந்தனையும் இல்லாத 19வது ஒரு இளைஞன் ஒருவன் பற்றி ஒன்றரை மணிநேரம் மிகக் கவனமான அலசுகிறது Beach Rats. இம்முறை லோகார்னோவில் ஏதேனும் ஒரு நடுவர் விருதை இத்திரைப்படம் தட்டிச் செல்லலாம் எனும் எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.

 Watch video!

- 4தமிழ்மீடியாவுக்காக லொகார்ணோவிலிருந்து சிறப்புச் செய்தியாளர்கள்

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்