திரைப்படவிழாக்கள்
Typography

லொகார்னோ 70வது சர்வதேச திரைப்படவிழாவில்,  Open Door பிரிவில் Jamshed Mahmood நெறியாள்கையில் உருவான பாகிஸ்தானிய திரைப்படம் Moor பார்க்க கிடைத்தது. பாகிஸ்தானின் கைவிடப்படும் / திருடப்படும் புராதன புகையிரத நிலையங்களுக்கு என்ன நடைபெறுகிறதென்பதே கதை. Moor என்பதனை «தாய், «தாய் நிலம்» என பொருள் கொள்ளலாம்.

2015 இல் ஆஸ்காருக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான போட்டியில் பாகிஸ்தானிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம். பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாநிலத்தின் ரயில் நிலையங்களில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

உபகயோகமற்று கைவிடப்படும் நிலைக்கு செல்லும் பாலை நில ரயில் நிலையங்களுக்கும், அந்நிலங்களின் பாரம்பரிய உரிமையாளர்களுக்கும் என்னென்ன சிக்கல்கள் உருவாகின்றன என்பதனை படம் காட்சிப்படுத்துகிறது.  நில உரிமையாளர்கள் மட்டுமல்ல. அந்த ரயில் நிலையங்கள் மிக வலுவாக இயங்குவதற்கு பல வருடங்கள் உழைத்து, அதனுடனே வாழ்ந்த மனிதர்களும் அவர்களே.

அம்மக்களைத் திடீரென சில முதலாலித்துவ மாஃபியா கும்பல்கள் பணத்தாசை காட்டி, அச்சுறுத்தி, வற்புறுத்தி எப்படியாவது அந்நிலங்களை கைவிட்டுச் செல்ல வைக்கின்றன. அவர்களது ஆசை, அந்நிலத்தின் ரயில் தண்டவாளங்களின் இரும்புகள் மீது.

எதிர்காலத்தில் அடுத்தவேளை கஞ்சிக்கே என்ன செய்வதென்று தெரியாது தவிக்கும் ஒரு குடும்பம், இறக்கும் தருவாயில் தாயின் சத்தியத்தையும் மீறி அதர்மத்தின் வழியில் சூழ்நிலைக்கைதிகளாக பயணிக்க நேரிடுகிறது.

தகப்பனோ இறந்தகாலத்தை துலைத்துவிடக் கூடாது என்பதற்காக அநீதியின் வழியில் செல்லத் துணிகிறான். மகனோ எதிர்காலத்தை துலைத்துவிடக் கூடாது என்பதற்காக அதே பாதையை தேர்ந்தெடுக்கிறான்.

இப்படத்தின் இயக்குமர் ஜாம்ஷெட் மொஹ்மோட், பாகிஸ்தானிய இளைஞர்கள் அமெரிக்காவுக்கு செல்வதற்காக எப்படி போலியான கல்விச் சான்றிதழ்களை பெற்றுக் கொள்கிறார்கள், அது எந்தளவு வருவாய் தரும் ஒருதொழிலாக மாறிப் போய்விட்டது என்பதனை மகன் கதாபாத்திரத்தில் காண்பித்திருப்பார். அது தவறு, பிழை செய்கிறாய் என இறுதிவரை கூடவே வந்து உறுத்தும் மனச்சாட்சியிடம் இறுதியில் தோற்றுப் போய் குழந்தையாக கதறியழுகிறான் மகன்.

இந்தியாவுடனான எல்லைச் சண்டை இல்லை. தலிபான்களோ தீவிரவாதமோ இல்லை. பெண்கள் சுதந்திரம்/சமவுரிமை குறித்த கரிசனை இல்லை. இவை மூன்றினாலுமே பெரும்பாலான பாகிஸ்தானிய மாற்று சினிமா காண்பிக்கப்படும் நிலையில்; இதுவரை வெளியுலகுக்கு தெரியாத ஒரு சமூகச் சிக்கல் குறித்து மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறது இத்திரைப்படம்.

வணிக ரீதியில் பெரிதாக வெற்றி பெறவில்லை என்ற போதும், இத்திரைப்படத்தின் உருவாக்கத்தில் உழைத்தவர்களின் தனிப்பட்ட பங்களிப்பும், விருப்பும் அனைத்து நிதிச் சவால்களையும் உடைத்தெறிய காரணமாகிற்று என படம் முடிவடைந்த போது இயக்குனர் ஜேம்ஷெட் மொஹ்மூட் கூறினார்.  

பாகிஸ்தானிய மாற்று சினிமா மீது நம்பிக்கை கொள்ள இத்திரைப்படத்தை பரிந்துரைக்கலாம் எனச் சொல்ல முடிகிறது.

- லோகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியாவின் சிறப்புச் செய்தியாளர்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்