திரைப்படவிழாக்கள்
Typography

நேற்றைய பியாற்சே கிராண்டே வெளியரங்கில் பிரித்தானிய இயக்குனர் Simon Bird இன் Days of Bagnold Summer எனும் அழகிய திரைப்படத்தை காணக்கிடைத்தது.

Bagnold  என்பது பிரித்தானிய குடும்பப் பெயர்களில் ஒன்று. Heavy Metal வகை மேற்கத்தேய இசையை விரும்பும் ஒரு பதின்ம வயது சிறுவன், தனது கோடை விடுமுறைக்கு, தாயை பிரிந்து வாழும் தந்தையை பார்க்க அமெரிக்கா செல்ல திட்டமிடுகிறான். ஆனால், கடைசிநேரத்தில் அந்த திட்டம் இரத்தாகிறது. வேறு வழியில்லாமல் தனது கோடை விடுமுறை முழுவதும், தன்னை  எப்போதும் வெறுப்புக்குள்ளாக்கும், எந்தவித சுவாரஷ்யமும் இல்லாத தனது தாயுடன் கழிக்கவேண்டியிருக்கிறது.

தனது 50 வயதுகளை கடந்து கொண்டிருக்கும் தாய், ஒரு நூலகத்தில் வேலை செய்பவள். கணவனை விவாகரத்து செய்து விட்டு தன்னந்தனியாக மகனை வளர்ப்பவள். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவள். தனது மகனை புரிந்து கொள்வதற்கு கடுமையாக முயல்கிறாள். அவனுக்கு ஏற்றால் போல் நடக்க கடும் முயற்சி மேற்கொள்கிறாள். அவன் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள முயற்சிக்கிறாள். ஆனால் இருவருக்கும் எப்போதும் முரண்பாடாகவே இருக்கிறது

இருவருக்கும் இடையிலான நலிந்த உறவை மிக அழகாக, யதார்த்தமாக படம்பிடித்திருப்பார், நகைச்சுவை நடிகரும், இயக்குனர் அவதாரம் எடுத்திருப்பவருமான Simom Bird. Bagnold கதாபாத்திரத்தில் அச்சிறுவனின் தாயாகவே வாழ்ந்திருப்பார் Monica Dolan. மகனையும், அவனது இசை ரசனையையும், அவன் உடுத்தியிருக்கும் கறுப்புச் சட்டைகளையும், அதன் பின்னால் ஒழிந்திருக்கும் அவனது அபிலாசைகளையும் புரிந்துகொள்வதற்கு கடுமையாக முயற்சிக்கும் தாய் கதாபாத்திரத்தில், தனது ஒட்டுமொத்த உணர்ச்சிகளையும், பரிதவிப்பையும்  தனது ஒற்றை முகப் பாவணையிலும், கண் இமைப்பிலும், தடுமாறும் வாய் உதடுகளிலும் விரித்துவிட்டிருப்பார் Monica Dolan.

தான் மிகவும் நேசிக்கும் Heavy Metal இசைக்கேற்றது போல், நீளமான தலைமுடியும், கறுப்பு ஆடைகளிலும், எந்நேரமும் சிடுசிடுத்த முகமுமாக காட்சியளிக்கும் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் Earl cave தனது தாயின் விருப்புக்களையும், கணவனை பிரிந்து வாழும் போதும், அவளது அபிலாசைகளையும் புரிந்துகொள்ளத் தொடங்குவதற்கு படத்தில் ஒரு காட்சி வைத்திருப்பார் இயக்குனர்.

அவர்கள் வீட்டு நாய் திடீரென ஒரு நாள் சோர்வடைந்து இறந்துவிடுகிறது. அதன் இறப்பில் அதன் இழப்பிலேயே தாயுடன் முதன் முதலாக சிரித்து பேசத் தொடங்குகிறான் மகன். படத்தின் தொடக்கத்திலிருந்தே ஒரு காட்சி மறுபடி மறுபடி வந்துகொண்டிருக்கும். வரப்போகும் திருமண நிகழ்வு ஒன்றுக்காக வடிவாக ஆடை உடுத்தவேண்டும் என்பதற்காக மகனை ஒரு சப்பாத்துக் கடைக்கு பல தடவை அழைத்துச் செல்வாள். அங்கு எந்தக் கோடுகளும், வண்ணமும் இன்றி முழுமையாக கறுப்பாக இருக்கும் சப்பாத்தைக் காட்டி அதை வேண்டும்படி மகனை கெஞ்சுவாள் தாய். அவனோ, Heavy Metal இசைக்காரர்கள் போடும் சப்பாத்தையே விரும்பிப் பார்ப்பான். படத்தின் இறுதிக் காட்சிகளில், இருவரும் திருமணத்திற்கு செல்லும் முன்னர், தாய், மகனுக்கு அவன் விரும்பிக் கேட்ட சப்பாத்தையே பரிசாக அவனுக்கு வழங்கியிருப்பாள். இது தாயை மகன் புரிந்து கொள்ளும் காட்சி. அதே போன்று தாயின் பிறந்த தினத்திற்கு இருவரும் உணவு விடுதி ஒன்றுக்குச் சென்று பலவகை உணவுகளை கோருகின்றனர். மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பர். அப்போது பக்கத்து மேஜைக்கு தாயின் இந்நாள் காதலன் இன்னொரு பெண்ணுடன் வந்திருப்பார்.  அவனைப் பார்த்தால் தாயின் மனம் நோகும் என பயப்படும் மகன், தாயை அந்த மேஜைப்பக்கம் பார்க்க விடாமல் செய்ய கடுமையாக முயற்சிப்பான். ஒரு கட்டத்தில் எழுந்து செல்வோமா எனக் கேட்பான். அதற்குள் தாய் அந்த மேஜை பார்த்துவிடுவாள். திரும்பி மகனை பார்த்து ஒரு புன்னகை செய்வாள். இது மகனை தாய் புரிந்து கொள்ளும் காட்சி.

படம் முழுவதும் இவ்விரு கதாபாத்திரங்கள் மாத்திரமே பெரும்பாலான காட்சிகளில் ஆக்கிரமித்திருப்பர். படத்தின் பெரும் பங்கும் அவர்களது வீட்டிலேயே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அனைத்தும் மிக இயல்பாக, எளியதாக காண்பிக்கப்பட்டிருக்கும். ஆனால் காட்சிக் கோர்வைக்குரிய ஸ்கிரீன் பிளேயும், வசனங்களும், இருவரின் நடிப்புமே படத்தின் பிரமாண்ட அழகுக்கு காரணம்.

- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா இயக்குனர்கள்

BLOG COMMENTS POWERED BY DISQUS