பியாற்சா கிராண்டேயின் பெருமிதம் : சமத்துவம்
- Wednesday, 08 August 2012 10:48

Marco Cacciamognaga
லொகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவின் செயல் இயக்குனர் திரு: மார்கோ ககியாமோக்னாகா (Marco Cacciamognaga) அவர்களுடனான சந்திப்பில், இவ்விழாவின் தனித்துவச் சிறப்பாக எதனைக் குறிப்பிடுவீர்கள் எனக் கேட்டபோது, புன்முறுவல் பூத்தவாறு ' சமத்துவம்... 'எனக் கூறினார்.
இதனை விளக்குவதற்கு அவர் சுட்டிய உதாரணம் மேலும் யதார்த்தமானது. 'பியாற்சா கிராண்டே பெருமுற்றத்தில் போடப்பட்டிருக்கும் சுமார் 8000 இருக்கைகளும் ஓரேவகையிலான மிகச் சாதாரணமான பிளாஸ்டிக் கதிரைகளே. இந்த விழாவிற்கு வரும் எந்த ஒரு முக்கிய பிரமுகரும் சரி, சராசரிப் பார்வையாளனும் சரி, இதே இருக்கையில்தான் இருப்பார்கள். பியாற்சா கிராண்டேயின் பெருமிதம் இந்தச் சமத்துவம். அதுவே லொகார்ணோ சர்வதேசத் திரைப்படவிழாவின் சிறப்பும் எனலாம்' என்றார். அவரது அந்தக் கூற்றினை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது நேற்றைய சிறப்புக் கௌரவ விருந்தினரது உரை,
இவ்வாறு சிறப்பு கௌரவ விருந்தினராக கலந்து கொண்டவர் பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆர்னொன் மில்சான் (Arnon Milchan). இவருடைய கலைச்சேவைக்கு கௌரவ லியோபார்ட் விருது வழங்கி கௌரவம் செய்யப்பட்டது.

Arnon Milchan க்கு கௌரவ லியோபார்ட் விருது வழங்கும் போது
நேற்று மாலை பியாட்சா கிராண்டே திறந்தவெளி திரையரங்கில் திரைப்படம் தொடங்கமுன்னர் இந்நிகழ்வு நடபெற்றது. மேடைக்கு ஏறியதும் முன்னாள் அமர்ந்திருந்த 8000 ற்கு அதிகமான பார்வையாளர்களை பார்த்து பரவசப்பட்ட ஆர்னின் மில்சான், உலகின் மிக நேர்த்தியான, நேர்மையான சினிமா ரசிகர்களை கொண்டிருக்கும் லொகார்னோ திரைப்பட விழா மக்கள் முன்னிலையில் நிற்கும் போது எனது சினிமா பயணத்தில் மிக உணர்ச்சிவசமான தருணமாக இதை உணர்கிறேன் என்றார்.

Arnon Milchan கௌரவ லியோபார்ட் விருதுடன்
ஒரு கட்டத்தில் மேடையிலிருந்து கீழிறங்குவதற்கு மனமில்லாமல் தவித்த ஆர்னின் மில்சான் இத்தருணத்தில் திறந்தவெளியில் அமர்ந்திருக்கும் எவரேனும் என்னிடம் கேள்வி கேளுங்கள் என்றார்.
லௌரா எனும் பெண்மணி சட்டென கைகளை உயர்த்த பார்வையாளர் அமர்விட்டத்திலிருந்து அவர் மேடைக்கு வரவழைக்கப்பட்டார். லோகார்னோவில் நிற்கும் தருணத்தை எப்படி உணர்கிறீர்கள் என அவர் மில்சானுக்கு அருகில் நின்று கேள்வி கேட்க Extraordinarily Happy என பதில் அளித்தார். இங்கிருக்கும் 8,800 மக்கள் சார்பாக உங்களை அரவணைத்துக்கொள்கிறேன் என அப்பெண்மணி கூறிக்கெண்டே அரவணைத்துக்கொண்ட போது, Standing Ovation (எழுந்து நின்று மரியாதை) கரகோஷம் விண்ணைப்பிளந்தது. மேடையை விட்டு இறங்கும் முன்னர் இறுதியில் அவர் கண்கலங்கினார்.

சுமார் நான்கு மணித்தியாலத்திற்கு மேல் நீண்டு செல்லும் கிளாசிக்கல் திரைபப்டமான Once Upen a Time in America (1984) உட்பட, மிகச்சிறந்த ஹாலிவூட் காதல், நகைச்சுவை திரைப்படங்களை தயாரித்தவர் மில்சன். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், பிரபல பிரெஞ்சு திரைபட இயக்குனர் Noemie Lvivsky யின் நகைச்சுவை திரைப்படம் Camille Rewinds (2012) முதன்முறையாக பொதுமக்கள் காட்சியாக திரையிடப்பட்டது. 40 வயதிலிருந்து, 16 வயது காலத்திற்கு, தனது 40 வயது தோற்றத்திலேயே, செல்லும் கதாநாயகிக்கு முதல் காதல், கல்லூரி நண்பர்கள், அன்பான பெற்றோர்கள் என அனைவருடனும் மீண்டும் வாழும் சந்தர்ப்பம் ஏற்படுவது தான் இத்திரைக்கதை.
கேன்ஸ் திரைபட விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட இத்திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றதை அடுத்து லொகார்னோ திரைப்பட விழாவுக்கும் தெரிவானது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12ம் திகதி பிரான்ஸிலும், பின்னர் பெல்ஜியத்திலும் இத்திரைப்படம் சினிமா திரையரங்குகளுக்கு வரவிருக்கிறது.
இதுவரையில் வெளிவராத வித்தியாசமான திரைப்படங்கள் குறித்த அறிமுகக் குறிப்புக்கள், இத் திரைப்படவிழாவின் மேலும் பல சுவாரசியங்கள் என்பன தவறவிடாமல் சேகரித்துவரும் பரபரப்பின் மத்தியில் இன்று பகிர்ந்து கொள்ள முடிந்தவை இவை. நாளை இன்னும் சில சுவையான செய்திகளுடன் சந்திப்போம்...
- செய்தியும் படங்களும்: லோகார்ணோவிலிருந்து 4தமிழ்மீடியாவின் சிறப்புச் செய்தியாளர்கள்
லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா தொடர்பான முன்னைய செய்திகள்

.jpg)