திரைச்செய்திகள்
Typography

ஒரு காலத்தில் சிவாஜியின் பாதிப்பு இல்லாமல் யாராலும் நடிக்க முடியாது என்கிற நிலை இருந்தது. அதற்கப்புறம் வந்தார் ரஜினி. முற்றிலும் வேறுபட்ட மாறுபட்ட ஸ்டைலில் கலக்கோ கலக்கென கலக்க, இந்தியாவே அவர் பின்னால் ஓடியது.

இன்னும் நூறு வருஷங்களுக்கு ரஜினி பாதிப்பில்லாமல் ஒருவராலும் நடிக்க முடியாது! ஊர் உலகத்திற்கே அப்படியிருக்கும் போது, ரஜினியின் வாரிசுகளுக்கு இருக்காதா என்ன?

கலையுலகத்தை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்கிற அவர்களது நினைப்பு, ஒரு கட்டத்தில் ஈகோவாக தலை தூக்க, ஐஸ்வர்யா ஒன்று செய்தால், அதைவிட டாப்பாக நான் ஒன்று செய்வேன் என்று முரட்டு கரம் தூக்கினார் சவுந்தர்யா. முடிவு? பயங்கரமானதுதான் மிச்சம். கோச்சடையான், அதற்கு முன்… சுல்தான் தி வாரியர், அது தவிர சில தமிழ் படங்களை நேரடியாக தயாரித்த அனுபவம் என்று கோடிகளை நாசமாக்கினார். பிள்ளைகள் வைத்த கடனை அப்பா சுமந்தார். எப்படியோ எல்லாம் ‘கபாலி’யால் சுப மயம்.

இந்த நேரத்தில்தான் நான் ஒண்ணு நீ ஒண்ணு என்று தனித்தனியாக யோசித்த சகோதரிகள் ஒன்று சேர்ந்து சித்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இணைந்து பணியாற்றவும் முடிவெடுத்திருக்கிறார்கள். முதல்கட்டமாக சவுந்தர்யா ரஜினி இயக்கத்தில், தயாரிப்பாளர் தாணு தயாரிக்கும் படத்தில் தனது கணவர் தனுஷ் ஹீரோவாக நடிக்க பரிபூரண சம்மதம் தெரிவித்திருக்கிறார் ஐஸ்வர்யா. அதுமட்டுமல்ல, தனுஷ் தயாரிக்கும் வேறொரு படத்தில் ரஜினி நடிக்கிறார் அல்லவா? அதில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கவும் போகிறார் ஐஸ்வர்யா. அந்தப்படத்தின் கதை விவாதம், மற்றும் ஷுட்டிங் விவகாரங்களிலும் தனது பங்களிப்பை செய்ய முன் வந்திருக்கிறாராம் சவுந்தர்யா.

பெண் குழந்தைகள் இரண்டும் ஒரே விஷயத்தில் ஒன்றிணைந்துவிட்ட சந்தோஷத்தை ஒரு சின்ன புன் முறுவலோடு கடந்து கொண்டிருக்கிறார் பாசக்கார அப்பாவான ரஜினி

BLOG COMMENTS POWERED BY DISQUS