சச்சின் டெண்டுல்கரை ஆஸ்திரேலிய பிரதமராக்குங்கள்! : கடுப்பில் மேத்யூ ஹேய்டன்
- Friday, 19 October 2012 09:34
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதவி கூட வழங்கலாம் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யு ஹேடன் தெரிவித்துள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
மூன்று நாள் சுற்றுப்பயணமாக அண்மையில் இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட், டெல்லியில் வைத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுலருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய கௌரவ விருதுகளில் ஒன்றான Order of Australia வில் அங்கத்துவ தகுதி வழங்கப்படுவதாக அறிவித்தார்.
இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவை வளப்படுத்திக்கொள்வதற்காக சச்சினுக்கு வழங்கப்பட்ட விருது இதுவென ஏற்கனவே ஆஸ்திரேலியாவிலிருந்து இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியது.
ஆஸ்திரேலியாவின் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று கருத்து தெரிவிக்கையில், நாம் சச்சிண் டெண்டுல்கர் மீது அளவுகடந்த மரியாதை வைத்துள்ளோம். ஆனால் இந்த விருது எப்போதும் ஆஸ்திரேலியர்களுக்கு வழங்கப்படுவதே முறை. அதனால் தான் எதிர்க்கிறோம் என்றார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேய்டன் வானொலி நிகழ்ச்சி ஒன்றில், இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். தன்னை பொருத்தவரையில், 'Order Of Australia' கௌரவம் ஆஸ்திரேலியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
சச்சின் மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் மட்டும் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்திருந்தால் அவருக்கு பிரதமர் பதவியே கொடுத்திருக்கலாம். ஆனால் அவர் இந்தியாவில் அல்லவா வசிக்கிறார் என கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், 'சச்சின் ஆஸ்திரேலியாவிலும் ஒரு தனித்துவமுடைய நபராக பார்க்கப்படுகிறார் என்பது உண்மை தான். மேலும் ஆஸ்திரேலியாவில் பெருந்தொகையான இந்தியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் இங்கு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் எமது நாட்டின் ஒரு மிகச்சிறந்த பகுதியினர். நாம் பல்லினத்தவர்கள் வாழும் நாட்டு மக்களாக இருக்கிறோம்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு இந்திய சட்டத்துறை வல்லுனர் சோலி சோராப்ஜீக்கு ஆஸ்திரேலியாவின் இந்த உயரிய கௌரவம் வழங்கப்பட்டது. இதையடுத்து சச்சினே இரண்டாவது இந்தியராக இவ்விருதுக்கு தெரிவாகியுள்ளார்.
எனினும் ஆஸ்திரேலியாவின் பலர் கூறுவது போன்று Order of Australia விருது ஆஸ்திரேலியர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதல்ல. முன்னதாக மேற்கு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரையன் லாராவுக்கும், மற்றுமொமொரு கிரிக்கெட் வீரருக்கும் கூட வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடனான ராஜதந்திர உறவுகளை வளர்த்துக்கொள்ள பல நாடுகள் சச்சினை பலிக்காடாவாக்குதே இங்கு பிரச்சினைக்கு உரிய விடயம். சச்சினின் திறமைக்கு மதிப்பளித்து விருது வழங்குவதாக கூறினாலும் பின்னணியில் ஏதோவொரு வர்த்தக நோக்கம் ஒளிந்திருக்கிறது எனவும் இந்திய கிரிக்கெட் ஆய்வாளர்களும் தற்போது விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
