Wednesday, Jun 19th

Last update03:26:39 PM

ராஜாங்க நலன் கருதி சச்சினுக்கு ஆஸ்திரேலியா விருது : கிளம்பும் எதிர்ப்பு

அரசியல் ராஜாங்க ஆதாயத்திற்காக, சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலிய அரசு உயரிய பதவி வழங்கி கௌரவிப்பதாக ஆஸ்திரேலியாவின் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, ஆஸ்திரேலியாவின் Order of Australia வில் அங்கத்துவர் எனும் உயரிய அந்தஸ்து வழங்கப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் நேற்று அறிவித்தார்.

மிக அரிதாகவே வெளிநாட்டவர் ஒருவருக்கு இக்கௌரவம் வழங்கப்படும். இரண்டாவது தடவையாக இந்தியர் ஒருவருக்கு இக்கௌரவம் வழங்கப்பட்டுள்ளதுடன், கிரிக்கெட் உலகில் பிரையன் லாராவுக்கு அடுத்து சச்சினுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இரு நாடுகளுமே கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கும் மக்களை கொண்ட நாடுகள் எனவும், இரு நாட்டு எதிர்கால நல்லெண்ண தொடர்புகள் சிறந்த முறையில் பேணப்பட வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் இக்கௌரவம் வழங்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினரான ராப் ஆக்ஸ்ஷாட் என்பவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சச்சின் டெண்டுல்கரை நான் மிகவும் நேசிக்கிறேன். எனினும் இது போன்ற மென்மையான ராஜாங்க நடவடிக்கைளில் எனக்கு உடன்பாடில்லை. இந்த விருது ஆஸ்திரேலியர்களுக்காக பாடுபடுபவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். ஆனால் மாற்றாக ராஜாங்க நலன் கருதி சச்சினுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், பல அமைப்புக்களும், ஊடகங்களும் சச்சினுக்கு இந்த உயரிய விருதை வழங்கக் கூடாது என்பதில் மிக ஒற்றுமையாக இருக்கின்றன.

2008 இல் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது, ஒரு போட்டியில் ஆஸ்திரேலியக் கிரிக்கெட் வீரர் சைமனை, ஹர்பஜன் சிங், குரங்கு என திட்டிவிட்டதாக புகார் எழுந்தது. இப்புகார் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டபோது, அத்தருணம் அருகில் இருந்த சச்சினின் வாக்கு மூலம் பெரிதாக எதிர்பார்க்கப் பட்டது. ஆஸ்திரேலியப் பத்திரிகைகள் சச்சின் நேர்மையானவர், எனவே உண்மையைக் கூறுவார் என்று எதிர்பார்த்து செய்திகள் வெளியிட்டன.

ஆனால் சச்சின் எனக்கு ஹர்பஜன் என்ன சொனார் என்று சரியாக காதில் விழவில்லை என்று இயல்பாக சொல்லிவிட்டார். இதில் ஆத்திரம் அடைந்த ஆஸ்திரேலிய பத்திரிகைகள் அப்போதே இது பற்றி கடும் கண்டனம் தெரிவித்து கட்டுரைகள் எழுதின. அந்த கட்டுரைகளை இன்று பல பத்திரிகைகள் மறு பதிப்பு செய்துள்ளன. எனவே சச்சினுக்கு விருது மறுக்கப் பட இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க:

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus