தோனி அதிரடி : மும்பையை வீழ்த்தியது சென்னை
- Wednesday, 23 May 2012 20:25

சென்னை - மும்பை அணிகளுக்கு இடையில் இன்று பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், சென்னை அணி 38 ரன்களால் வெற்றி பெற்றது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 187 ரன்களை எடுத்தது. முரளி விஜய், சுரேஷ் ரைனா ஆகியோர் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தனர். எனினும் பத்ரினாத் - மைக் ஹஸி ஆகியோர் சிறப்பான இணைபந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 94 ரன்களை பகிர்ந்து கொண்டனர். மைக் ஹஸி 39 பந்துகளில் 49 ஓட்டங்களையும், பத்ரினாத் 39 பந்துகளில் 47 ஓட்டங்களையும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய ஜடேஜா 1 ரன்னுடன் ஆட்டமிழந்தார்.
எனினும் தோனி - பிராவோ ஜோடி அதிரடி ஆட்டத்தை தொடக்கியது. பிராவோ 14 பந்துகளில் 3 பவுன்றிகள், 2 சிக்ஸர் அடங்களாக 33 ஓட்டங்களை எடுத்தார். தோனி 20 பந்துகளில் 6 பவுன்றிகள் 2 சிக்ஸர் அடங்களாக 51 ஓட்டங்களை ஆட்டமின்றி எடுத்தார். கடந்த போட்டியில் இறுதி மூன்று பந்தில் சிக்ஸர் அடித்து மும்பை வெற்றி பெற்றதற்கான பழிவாங்கும் நடவடிக்கையாக தோனியின் இன்றைய வெறியாட்டம் அமைந்திருந்தது. களத்திற்குள் நுழைந்தது முதலே பவுன்றி, சிக்ஸர் என விளாசத்தொடங்கினார்.
அவர் அடித்த ஒரு சிக்ஸர் சின்னசுவாமி மைதானத்தின் கூரைக்கு மேலாக மைதானத்தை விட்டு வெளியே போய் வீழ்ந்தது. ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட மிகப்பெரிய சிக்ஸர் (112 M) ஆக இது சாதனை படைத்தது. மேலும் தோனி அடித்த இன்னுமொரு ஹெலிகாப்டர் ஷாட் சிக்ஸ் ம் உம் வர்ணனையாளர்களால் பெரிதும் பேசப்பட்டது.
பதிலுக்கு களமிறங்கிய மும்பை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சச்சின் - ஸ்மித் ஜோடி அதிரடியாக ஆட்டத்தை தொடக்கியது. 5 ஓவர்களில் 47 ரன்கள் பெறப்படது. எனினும் சச்சின் டெண்டுல்கர் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார்.
ஸ்மித் 22 பந்துகளில் 38 ஓட்டங்களை எடுத்தபோது ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கியவர்களும் வரிசையாக ஆட்டமிழக்க தொடங்கினர். இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 149 ரன்களை மாத்திரமே மும்பை எடுத்தது.
பந்துவீச்சில் மோர்கல், பிராவோ தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இப்போட்டியில் சென்னை வென்றதன் மூலம் டெல்லி - சென்னை அணிகள் இரண்டாவது Qualifier போட்டியில், நாளை மறுதினம் மோதுகின்றன. அதில் வெற்றி பெறும் அணி கொல்கத்தாவுடன் இறுதி போட்டியில் மோதும் வாய்ப்பை பெறும்.
இன்றைய போட்டியின் பின்னர் பரிசளிப்பு விழாவில் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்ட தோனியிடம், அவர் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் பற்றி கேட்கப்பட்ட போது, சின்ன வயதில் டென்னிஸ் போலில் கிரிக்கெட் விளையாடும் போது அதை அடித்து பழகியதாக தெரிவித்தார். ஆனால் உடல் ரீதியில் வலி தரக்கூடியது என்றார்.
